ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள ஒரு நீர் தேக்க தொட்டியில் ஆண் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் குடிநீர் சேவை நிறுத்தபட்டுள்ளது.
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள வருவாய்க்கோட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி நீர் தேக்கத்தொட்டியில் நேற்று குடிநீர் திறக்க வந்த ஊழியர் தண்ணீர் திறந்துள்ளார். அப்போது நீரில் துறுநாற்றம் வீசியுள்ளது. ஆனால் நீர்த்தேக்க தொட்டியை திறந்து பார்க்காமல் ஊழியர் சென்றுவிட்டார். அதேபோல் இன்று தண்ணீர் திறக்க வந்தபொழுது தண்ணீரில் அதிகப்படியான துர்நாற்றம் வீச ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி சோதனை செய்தபோது ஒரு ஜோடி செருப்பும் ரத்தக்கறையும், பிளேடு துண்டுகளும் இருந்ததை கண்டு அதிர்ந்தனர், மேலும் தொட்டிக்குள் ஏதேனும் பொருள் அல்லது சடலம் உள்ளதா என தொட்டியை திறந்து பார்த்தபோது சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் உடனடியாக ராமநாதபுரம் நகராட்சிக்கு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் சேவையை நிறுத்தினர். குடிநீர் தொட்டியில் ஆண் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் அந்த குறிப்பிட்ட நீர் தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.