Skip to main content

நள்ளிரவில் ஏற்பட்ட துயரச் சம்பவம்; 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலியான சோகம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Roof collapse incident; 4 people including 2 girls issue

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (வயது 70). மனைவி விஜயலட்சுமி (வயது 38), குழந்தைகள் பிரதீபா (வயது 12), ஹரிணி (வயது 10)என 5 பேர் வசித்து வந்தனர். இந்த சூழலில் மாரிமுத்து தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது, அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடிக்கு சென்றபோது எதேச்சையாக பார்த்துள்ளார். அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு, உடனடியாக திருச்சியை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் ஈடுபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 4 பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்