" அவங்களோட அன்னம் தண்ணீ புழங்கக்கூடாது.! எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது.!! " என சொந்த சமூகத்திற்குள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள குடும்பம் காவல்நிலையம் செல்ல இந்த விஞ்ஞான உலகத்திலும் கூட இப்படி ஒரு சம்பவமா..? என விவகாரம் பெரிதாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமுபிள்ளைத் தெருவின் ஒரு பகுதியில் மட்டும் கூட்டாக அருந்ததிய சமூக மக்கள் வசிக்கின்றனர். அரசு வேலை வாய்ப்பு, நகராட்சியில் பணி என என்றிருந்தாலும் பெரும்பாலோனோர் காலணி தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேக் குடியிருப்பு மத்தியிலுள்ள நொண்டி முனீஸ்வரர் தான் இவர்களுக்கெல்லாம் குல தெய்வமே.! வீட்டினில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இவர் தான் சாட்சி.! எனினும், தற்பொழுது இந்த கோவிலிலிருந்தும், குடியிருப்பிலுருந்தும் சொந்த சமூக மக்களாலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளது சரவணமுத்துவின் குடும்பம்.
" கோவிலை பொறுத்தவரை சிலர் வைத்தது தான் சட்டமே.! குடும்ப வரி, இளைஞர் வரி என தலைக்கு இவ்வளவு என சமுதாய மக்கள் அனைவரிடமும் வசூலித்துத் தான் கோவில் திருவிழாவையே நடத்துவதும், முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மண்டகப்படியிலும் கலந்து கொள்வது காலங்காலமாக நடைபெறும் சம்பிரதாயம். இந்த வருடத்தில் வரி வசூலுக்காக வந்தவர்கள் கோவிலில் சாமி கும்பிட கூப்பிடவில்லை. இது பல தடவை நடக்க, ஒருக்கட்டத்தில் பொறுக்க முடியாமல், " பணம் வாங்க மட்டும் வார்றீங்க.! கோவிலுக்கு கூப்பிடுவதில்லையே ஏன்..?" என சப்தம் போட, என்னை அறைந்ததோடு மட்டுமில்லாமல் சமுதாயத்திலிருந்து தள்ளியும் வைத்து விட்டனர். எங்களை எதற்கும் கூப்பிடுவதில்லை. எங்களோடு பேசுவதில்லை. அதே சமுதாயத்தில் அவர்களோடு இருந்தாலும், அகதி போல் தான் அங்கு வாழ்கிறோம். " என்கிறது ஊருக்குள்ளே ஒதுக்கி வைக்கப்பட்ட சரவணமுத்து குடும்பம். விவகாரம் காவல்துறை வசம் சென்றிருப்பதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.