2016ல் இந்திய சாலைகள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 23கோடி. இப்போது அதன் எண்ணிக்கை சற்று கூடி இருக்கும். அப்படி 24 மணிநேரமும் வாகனங்கள் பயணித்த மாநில, தேசிய, கிராம சாலைகள் இப்போது தன் கருத்த மேனியை நீட்டி படுத்து ஓய்வெடுத்துவருகின்றன. அதேபோல் தொழிற்சாலைகளில் இயங்கிய இயந்திரங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன.
இதனால் உற்பத்தி தேக்கம், அடித்தட்டுமக்களின் திண்டாட்டம் ஒரு பக்கம், பொருளாதார வளர்ச்சி பின்னடைவு மறுபக்கம். காரணம் இந்த கொரோனா வைரஸ் பரவல். இதில் கூட மனிதனுக்கு நல்லவையும் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 92 பெரிய நகரங்களில், 39 நகரங்களில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது என ‘கேர் ஃபார் ஏர்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அவர்களின் ஆய்வில் காற்றின் மாசு 100 200 என இருந்தால் அது சுவாசிப்பதற்க்கு ஏற்றது அல்ல. அப்படியிருந்த காற்று மாசு இப்போது டெல்லியில் 68, சென்னை 49, பெங்களூர் 65, மும்பை 71, திருவனந்தபுரம் 45, திருப்பதி 71 லக்னோ 63, வாரணாசி 53, அமிர்தசரர் 68 என காற்றின் மாசு குறைந்துள்ளது.
காற்றின் மாசுவை 100, 200 என்ற புள்ளிக்கணக்கில் கணக்கிடுவார்கள் 50 புள்ளி இருந்தால் அது மனிதன் சுவாசிக்ககூடியது எனவும் அதற்குமேல் எந்த அளவு காற்றில் மாசு கூடுகிறதோ அந்த அளவிற்கு மனிதர்களுக்கு சுவாசிப்பதன் மூலம் உடல் பாதிப்பு ஏற்ப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு சுவாசபிரச்சனை, அதன்மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல், பெருநகரங்களில் பணம்கொடுத்து நல்ல காற்றை சுவாசிக்க ஆஸ்சிஜன் பார்லர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் வசதியானவர்கள்.
ஆனால் ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்? தற்போது அரசின் தடை உத்தரவால் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் வெளிவரும் புகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நைட்ரஜன் ஆக்சைடு அளவு குறைந்து மனிதர்கள் நல்லகாற்றை சுவாசிக்கிறார்கள். உதாரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு காற்று மாசுவினால் சாலைகளில் மக்கள் பயணிக்க முடியாமலும், அங்கு வசிக்கும் மக்கள் அந்த காற்றை சுவாசிக்க முடியாமலும் திணறினார்கள். இதனால் டெல்லி அரசு சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு சிஃப்ட்டு முறையை கொண்டு வந்தது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இது பற்றி ஆய்வு செய்த கேர் ஃபார் ஏர் அமைப்பின் இணை நிறுவனரும், மேற்படி தகவல்களை வெளியிட்டவருமான ஜோதிபாண்டேலாவாகரே மேலும் கூறுகையில், காற்று மாசுவிலிருந்து மனிதர்களை காப்பாற்றும் அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மந்த நிலை வந்திருக்க தேவையில்லை, அது ஏற்றதும் அல்ல.
அதேநேரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகனங்களில் இருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வெளிவரும் மாசுவின் தரத்தை கட்டுப்படுத்தி மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய அளவிற்கு கொண்டுவரவேண்டும் என்கிறார். இதுபற்றி நெய்வேலி இயற்கை ஆர்வலர் ஆதித்யாசெல்வம், “எதிற்காலத்தில் தொழிற்சாலைகள் இயக்கத்திலும், வாகனங்கள் இயக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டுவந்து காற்றுமாசை குறைக்கவேண்டும். மேலும் ஏற்கனவே சாலைகளில் செல்லும் வாகனங்கள் தரமற்றவையாக உள்ளதால் அவை மூலம் வெளியேறும் புகை அதிக மாசை உண்டாக்குகிறது. புதுப்புது வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதை கட்டுப்படுத்த வேண்டும்.
வாகன எண்ணிக்கை அளவிற்கு அவைகள் பயணிக்க சாலைகள் இல்லை. மேலும் பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல் மின்சாரம் மூலம் செல்லும் வாகனங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில், ஆயட்காலம் முடிந்த வாகனங்களை முடக்கவேண்டும். இப்படிசெய்வதன் மூலம் இனிவரும் தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்க முடியும். வரும் தலைமுறையினருக்கு சொத்து, சுகத்தை விட்டுசெல்கிறோமோ இல்லையோ, நல்ல காற்றை விட்டுசெல்ல வேண்டும். இது கரோனோ வைரஸ் நமக்கு சொல்லித்தரும் பாடமாக எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
வாகனங்களும், தொழிற்சாலைகளும் 21 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முன்பைவிட அதிக வேகமெடுத்து பயணித்து உற்பத்தியை துவங்க உள்ளன. இதன் மூலம் காற்று மாசும் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். அதனால் மத்திய, மாநில அரசுகள் காற்று மாசுவை குறைக்க கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.