திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் 150 ஆர்.டி.பி.சி.ஆர். மிஷினும், ஒரு தொகுதிக்கு 1 லட்சம் வீதம் 9 லட்சம் ‘என் 95’ மாஸ்க்குகளும் வழங்கப்பட்டது. அதேபோல், ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேஷன் சார்பில் 14 லட்சம் ரூபாய் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி ஒன்று வழங்குதல், திருச்சி பிளைவுட் ஹார்டுவேர் அசோசியேஷன் சார்பில் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாயைத் திறந்து வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றன.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கரோனா காலகட்டத்திலும் பொது மருத்துவத்தில் திருச்சி ஜி.எச். சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக நடைபெற்று மூன்று உயிர்கள் பாதுகாக்கப்பட்டன" என்றார்.
மேலும், "நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முதல்வர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து அழுத்தம் தரப்படும். அதிக பயிற்சி அளித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவு பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும். 30 ஆயிரம் பேர் மருத்துவத் துறையில் தற்காலிக பணியில் உள்ளனர். அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது சாத்தியம் இல்லை. கரோனா கால கட்டம் முடிவடைந்த பிறகு பணியிடங்களுக்கு தக்கவாறு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கடந்த காலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டதால் 19 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக மத்திய அரசு வழங்கியது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் 79 லட்சம் தடுப்பூசிகள் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தினந்தோறும் 3 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 87ஆயிரத்து 240 தடுப்பூசிகள் பெறப்பட்டு, அரசு சார்பில் 2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 231 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 2 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 763 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன" என்று அவர் கூறினார்.