தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, அறிக்கைகளை வெளியிடுவது எதிரி வாய்களுக்கு அவல் ஆகிவிடும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின் கட்டண உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டதை முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் மின் கட்டணம், சமீபத்தில் உயர்த்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய முரசொலி, கேரளாவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, பாலகிருஷ்ணன் அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளது.
மின் கட்டணத்திற்கான காரணத்தை விளக்கியுள்ள கட்டுரை, தி.மு.க.விற்கும், அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இடையே சிண்டு முடிந்து, கூட்டணியை முறித்து விட, ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கூட்டணி கட்சிகள் விடும் அறிக்கைகள், எதிரிகளின் வாய்க்கு அவலாகிவிடாமல் செயல்பட வேண்டும் என முரசொலி எச்சரித்துள்ளது.