Skip to main content

வாடகை வாகன உரியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

rental vehicle owners and drivers protest

 

வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கரோனோ நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜூன் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கார், வேன் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வாடகைக்கு இயக்கப்படும் இந்த வாகனங்கள் கடந்த 5 மாதங்களாக இயக்கப்படாததால் அவற்றின் உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த நிலையில் வாகனங்களுக்கு சாலை வரி கட்டவும், காப்பீடு புதுப்பிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறது. 

 

இதனால் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாடகை வாகன  உரிமையாளர்கள் - ஓட்டுநர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார்.  இது குறித்து அவர் நம்மிடம், "கரோனா ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதால் கார், வேன், டெம்போ போன்ற வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் இதை நம்பியுள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை வரி கட்டச் சொல்லியும், காப்பீடு புதுப்பிக்கச் சொல்லியும் ஆர்.ட்டி.ஓ. அலுவலகங்கள் மூலம் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது. அதேபோல் கடன்தொகைக்கான மாதத் தவணைகள் மட்டுமல்லாது அபராத வட்டியும் கட்டச் சொல்லி நிதி நிறுவனங்களால் நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறோம்.

 

ஐந்து மாதங்களாக வாகனங்கள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்கள் எப்படி இவைகளைச் செலுத்தமுடியும்? வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அன்றாடம் வாழ்வாதாரத்தை நகர்த்துவதற்கு அரசாங்கத்தை நம்பி இருக்கிறோம். வருவாயின்றி தவிக்கும் எங்களுக்கு பேரிடர் கால வாழ்வாதார நிதியை அரசு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். மேலும் எங்களுக்குத் தனியாக நலவாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்கிறோம். கடந்த 5 மாதங்களாக வேலை இல்லை என்றாலும் இன்று அரசுக்கு எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் செய்கிறோம் எனவே அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க  வேண்டும்" என்றார். 

 

http://onelink.to/nknapp

 

இதேபோல் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம், தொழுதூர் இராமநத்தம் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்