கரூர் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் ஏற்கனவே ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செயல்பட்டு வந்தது. தற்போது மாநகராட்சி உட்பட்ட எல்.ஜி.பி நகர் பகுதியில் இட மாற்றம் செய்யப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதியில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பலருக்கும் இது தெரிவது இல்லை.
மாதந்தோறும் 5ம் தேதி இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் கடந்த 5ம் தேதியும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது பலருக்கும் தெரியாததாலும், புதிய அலுவலகத்திற்கான முகவரி தெரியாததாலும் கடந்த 5ம் தேதி நடந்த பொதுமக்கள் கூறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிகளவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த அலுவலக வாசலுக்கு அருகிலேயே பன்றிகள் மேய்ந்து வருகின்றன. நகர்புறங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அங்குள்ள தனியார் இடத்தில் குளம் போல் தேங்கியுள்ளது. ஆடு, மாடுகளுடன், பன்றிகளும் மேய்கப்பட்டு வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு மிக அருகிலேயே சுகாதாரக் கேடு என்பது பொது மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் கல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும், சட்டவிரோத கல்குவாரிக்கு சீல் வைக்க வேண்டும் எனக் கூறி சமூக செயல்பாட்டாளர் சண்முகம் என்பவர் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளித்து வருகிறார். கடந்த 5ம் தேதி நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 10 மனுக்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமிடம் மனுவாக அளிக்கச் சென்றார். அங்கு பணியில் இருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டி அலுவலகத்திற்குள் செய்தியாளரை அனுமதிக்க மறுத்துவிட்டார். கண்ணாடி கதவு வழியாக கேமரா மூலம் வீடியோ எடுத்ததை பார்த்த அந்த அதிகாரி உள் கதவையும் பூட்டி செய்தியாளர்களை வெளியேற்றினார்.