திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் மருதாநதி அணை பகுதியில் புதிய கட்டடத் திறப்பு விழாவும் பயனர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மண்டல சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசி, முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திருமாவளவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஒன்றியச் செயலாளர்கள் பிள்ளையார்நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில், அய்யம்பாளையும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டடத்தை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது, “அணையில் தண்ணீர் திறந்துவைக்க வரும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், இந்த அணை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரால் கட்டப்பட்டது. இருபது வருடத்தில் முதன்முறையாக முதல் போக நெல் விவசாயத்திற்கு இப்போதுதான் தண்ணீர் சரியான காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிந்துள்ள புதிய விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க உத்தரவிட்டதால், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கினோம். இதன்மூலம் 40% விவசாயிகள் அதிகரித்துள்ளனர். தமிழகத்தில் விவசாய தொழில் அழிந்துவரும் நிலையில், அதைப் பாதுகாக்கும் வண்ணமாக தமிழக முதல்வர் கொடுத்த பணம் கை கொடுத்துள்ளது.
இங்கு மருதாநதி அணை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கேட்டு மனு கொடுத்துள்ளார்கள். விரைவில் குறை தீர்க்கப்படும். இதுபோல மலை கிராமமான புல்லாவெளி பகுதியிலும் பகுதிநேர நியாய விலைக் கடை கேட்டுள்ளார்கள். விரைவில் அப்பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்படும். மருதாநதி அணை அருகிலுள்ள ஏ.கே.ஜி நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டுள்ளார்கள். ஒருமாத காலத்தில் அவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் விடும்போது விவசாயிகள் சங்கம் ஒன்று சேர்ந்து, தண்ணீர் திறந்துவிடுங்கள், தண்ணீர் திறந்துவிடுங்கள் என ஏங்கிய காலம் போய் விவசாயத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுகிறோம். நீங்கள் விவசாயம் செய்யுங்கள் என சொல்லும் காலம் உருவாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரே. அவர் விவசாயிகள் நலன் காப்பதில் முழு மூச்சாக செயல்படுகிறார். அதனால்தான் முதல் போக விவசாயத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கோட்டையை அடுத்த வாடிப்பட்டி வரையிலான விவசாயிகள் பயனடைவார்கள் என்றார். அதிமுக ஆட்சிக்காலத்தில் முதியோர்களுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் நிவாரண உதவித்தொகை விரைவில் அவர்களுக்கு கிடைக்கும்” என்று கூறினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் வினோத், அன்பரசு, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வகுமார், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ஹேமலதா மணிகண்டன், அய்யம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், மலைச்சாமி, ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.