இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா, இந்தியா என்றைக்கும் இஸ்ரேலை ஆதரித்தது இல்லை. ஆனால், இப்போது ஆதரித்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று (18-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இஸ்ரேலை இந்தியா ஆதரித்துள்ளது. ஆனால், இதுவரை இஸ்ரேலை இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை. பாலஸ்தீனத்தை தான் நாம் ஆதரித்து இருக்கிறோம். எந்த நாடு ஒடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டை மட்டும் தான் ஆதரிக்க வேண்டும். அது தான் நியதி, அணிசேரா நாடுகளின் தத்துவம் இது தான். அது தான் இந்தியாவினுடைய கொள்கையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் கொள்கை அப்படியே மாறிவிட்டது. இது தான் மோடியின் இன்றைய இந்தியா” என்று கூறினார்.