Skip to main content

ஊழல் துணைவேந்தரைக் காப்பாற்ற சதி! ராமதாஸ் குற்றச்சாட்டு

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
ramadoss-pmk


 


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கியபோது கையும், களவுமாக அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய இந்த வழக்கில் நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான வழக்கு அல்ல. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்பவரிடமிருந்து கையூட்டுப் பணத்தை துணைவேந்தர் கணபதி அவரது இல்லத்தில் வைத்து வாங்கிய போது தான் கையும் களவுமாக பிடிபட்டார். அதுமட்டுமின்றி, பணி நியமன ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நோக்குடன் துணைவேந்தரும், அவரது மனைவியும் கழிப்பறையில் வீசிய ஆவணங்களும் கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ளன. உதவிப் பேராசிரியர் பணிக்கு கையூட்டு தருவது பற்றி சிலரிடம் துணைவேந்தர் தொலைபேசியில் நடத்திய உரையாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் உள்ளிட்ட இவ்வழக்கின் எதிரிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாமதமாவது பல்வேறி ஐயங்களை எழுப்பியுள்ளது. 

 

வழக்கமாக கையூட்டு வாங்கியவர்களை காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு கையும், களவுமாக பிடிக்கும் போது, அரசுத் தரப்பு சாட்சி ஒருவரும் உடனிருப்பார். அதன்பின் சந்தர்ப்ப சாட்சியங்களை சேகரிக்க வேண்டியது தான் அவர்களின் பணியாகும். இதையும் ஒரு சில நாட்களிலேயே கையூட்டுத்  தடுப்புப்பிரிவு சேகரித்து விடும் என்பதால் இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை மிகவும் விரைவாக தாக்கல் செய்து விட முடியும். ஆனால், துணைவேந்தர் கைது செய்யப்பட்டு 310 நாட்கள் ஆகியும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கிரிமினல் வழக்குகளைப் போலவே கையூட்டு வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இவ்வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைக் காரணம் காட்டி தமக்கு மீண்டும் துணைவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்று கோருவதற்குக் கூட கணபதிக்கு உரிமை உள்ளது. இதையெல்லாம் அறிந்திருந்தும் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் தாமதம் செய்கிறார்கள் என்றால் அது இயல்பாக நடப்பதாகத் தெரியவில்லை. இதற்காக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்களும் ஏற்கும்படியாக இல்லை.

 

முன்னாள் துணைவேந்தர் கணபதியின் குரல் பதிவு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது; ஆளுனர் மாளிகையில் இருந்து சில ஆவணங்களைப் பெறக் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கையூட்டுத் தடுப்புப் பிரிவு விளக்கம் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியுள்ளது. குரல் பதிவுகளை அதிகபட்சம் 10 நாட்களில் ஆய்வு செய்து விட முடியும்; அதனால் இக்காரணத்தை ஏற்க முடியாது. அதேபோல், தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழக ஆளுனர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை இன்னும் வழங்கவில்லை என்பது உண்மையென்றால் அது பெரும் குற்றம்.

 

கையூட்டு வாங்கிய போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட  கணபதி அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளைக் கூறியுள்ளார். துணைவேந்தர் பதவிக்காக யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது, பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் இப்போதுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது  என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிடப்போவதாக கணபதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவருக்கும்,  அமைச்சர் தரப்புக்கும் செய்து கொள்ளப்பட்ட எழுதப்படாத சமரச உடன்பாட்டின்படி தான் கணபதி மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி கணபதி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

 

பணி நியமனத்திற்காக கையூட்டு வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்கப்பட்டால் அந்த நாள் தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அதன்பின் ஊழலைப் பற்றி பேசுவதே அர்த்தமற்றதாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. எனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கணபதி உள்ளிட்டோருக்கு தண்டனைப் பெற்றுத் தர கையூட்டு தடுப்புப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.