தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் அதிமுக, திமுகவுக்கு எதிராக கொளுத்திப்போட்டாலும் ஆளுங்கட்சிக்கு எதிராக சரவெடி கொளுத்தியிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தார். இதன் பின்னர், சர்கார் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தனர். படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாகவும் தகவல் வந்தது. சர்க்கார் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா என்று தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மறைமுக மிரட்டலை அடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சர்காருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
’’தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத்தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.’’