நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் டிசம்பர் 12ந்தேதி. ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் வெகுவிமர்சையாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டாடுகின்றன. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனச்சொல்லி தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றியதற்கு பின் மக்கள் மன்றத்தின் பணிகள் தீவிரமாகவுள்ளன.
இந்தாண்டு வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில், அதன் மா.செ சோளிங்கர் ரவி, எளிமை மனிதரின் எழுபதாவது பிறந்தநாள் விழா என்கிற பெயரில் ரஜினியின் பிறந்தநாளை நவம்பர் 30ந் தேதியே கொண்டாடினார். இதற்காக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ( ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ) சார்பில் வேலூரில் உள்ள பிரமாண்டமான தனியார் மண்டபத்தில் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் அங்கு திரண்டுதிருந்தனர்.
இந்தநிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட இயக்குநர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிக்கையாளர் ரங்கராஜ்பாண்டே போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். சோளிங்கர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், ரங்கராஜ்பாண்டே பேசும்போது, அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய திமுக, ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும். அரசியல் என்பது அதிகாரம். அந்த அதிகாரம் என்பது பெரியது. அதனை விட்டுவிட அரசியல்வாதிகள் யாரும் விரும்பமாட்டார்கள். இதுயெல்லாம் ரஜினிக்கு தெரியும். அதனால்தான் அவர் யோசிக்கிறார். ஏன் எனில் அவருக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டும்மே தெம்பாக சந்திக்க முடியும். தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒரே பந்தில் சிக்ஸர் அடிக்க விரும்புகிறார். அது தன்னால் அடிக்க முடியும் என எப்போது அவர் நம்புகிறாரோ அப்போது அரசியலுக்கு வருவார் என நினைக்கிறேன் என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, எளிமை மனிதர் என தலைப்புக்கு பொருத்தமானவர் ரஜினி. 16 வயதினிலே படத்துக்கு பரட்டை கதாபாத்திரத்துக்கு ஆள் தேடியபோது, பிரசாத் ஸ்டூடியோவில் தான் ரஜினியை முதல்முறையாக பார்த்தேன். அப்போது வேறு ஏதோ ஒருப்படத்தில் நடித்துக்கொண்டுயிருந்தார். பரட்டை கேரக்டரை பற்றி சொல்லி அவருக்கு 3 ஆயிரம் சம்பளம் பேசி நடிக்க ஒப்புக்கொண்டார். வசதி வாய்ப்புகள் இல்லாத காலக்கட்டம்மது. நாயகன் – நாயகிக்கு மட்டும் ஒரு கெஸ்ட் ஹவுஸில் ரூம். நானும், ரஜினியும் அந்த கெஸ்ட்ஹவுஸ் ஹாலில் படுத்துக்கொண்டு பல கதைகள் பேசிக்கொண்டு இருந்துள்ளோம். அப்போது நான் பார்த்த அதே எளிமையான ரஜினியாகத்தான் இப்போதும் இருக்கிறார். நான் அவரின் அரசியல் நிலைப்பாட்டுக்குள் போகவிரும்பவில்லை. அவரது கொள்கை வேறு, என்னுடைய கொள்கை வேறு. அரசியலையும், நட்பையும் நாங்கள் பிரித்தே வைத்துள்ளோம் என்றார்.
கலைப்புலி தாணு பேசும்போது, என் நாடி நரம்பு ரத்தம் அனைத்திலும் ஊறிப்போனவர் என் தலைவர் கலைஞர். அவரை மட்டும்மே நான் தலைவராக ஏற்றுக்கொண்டேன். அவருக்கு பின் நான் நேசிப்பது ரஜினியைத்தான். நன்றி மறக்காதவர் என்றவர் ரஜினியின் பிறந்தநாளுக்கானது எனச்சொல்லி ஒரு மரபு கவிதையை வாசித்தார்.