நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ஒரு கட்சியாக செயல்பட பல முயற்சிகள் எடுத்திருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கட்சி எப்போது ஆரம்பிக்கிறேன், கட்சியின் பெயர் என்ன எனத் தெரிவிப்பதாக தனது ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அங்கு சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதேவேளையில் நடிகர் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று சென்னை திரும்பினார். அதன்பின் திடீரென, தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிக்கை வாயிலாக அறிவித்தார்.
இதைக்கேட்ட ரஜினி ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்து, அவர் தொடர்ந்து இதுபோன்று ஏமாற்றம் கொடுத்துவருகிறார் என்று அவருக்கு எதிரான கண்டனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினி மன்றங்களை சேர்ந்த ரசிகர்கள், சென்னையில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தி அவரை மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தை குறித்து ரஜினிகாந்த், "என்னுடைய முடிவை நான் தெளிவாக அறிவித்து விட்டேன். மீண்டும் என்னை இதுபோன்ற கூட்டங்கள் வாயிலாக வேதனைப் படுத்தாமல் இருங்கள். நான் மன்றத்தில் இருந்து நீக்கிய நிர்வாகிகளோடு சேர்ந்துகொண்டு, சிலர் இப்படி ஒரு கூட்டத்தையும், போராட்டத்தையும் நடத்தியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனவே, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.