முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வின் நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து, அவரை பிடிக்க ஆறு தனிப்படைகளை மாவட்ட காவல்துறை அமைத்து, தீவிரமாகத் தேடி வருகிறது. மேலும், அவரது உறவினர்கள், உதவியாளர், கார் ஓட்டுநர் உள்ளிட்டோரை அழைத்து வந்து, காவல் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதேபோல், தனிப்படை காவல்துறையினர், திருச்சி, தென்காசி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு அவரை தீவிரமாக தேடி வருவதாக தகவல் கூறுகின்றன.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது மனுவில், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, இல்லையா என்பது திங்கள்கிழமை தெரிந்துவிடும்.
அடுத்தவாரம் முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வரவுள்ளதால், உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த வாரம் முதல் விடுமுறை நாட்களாக இருக்கும் நிலையில், ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீடு அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.