விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு வடகிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆவணிப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்குச் சொந்தமான காலி மனை புதர் மண்டிக் கிடந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள மிகப்பெரிய ராஜநாகம் இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பார்த்ததோடு அதை தங்கள் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்த தகவலை திண்டிவனம் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர். அவர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்து பார்த்தனர். பல மணி நேரம் தேடியும் ராஜநாகம் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் கூறும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தான் இதுபோன்ற ராஜநாகம் வசிக்கும். கிராமங்கள் நிறைந்த இப்பகுதியில் ராஜநாகம் இருப்பது வியப்பாக இருக்கிறது. அது இங்கே எப்படி வந்திருக்கும்; இப்பகுதியில் இருந்து யாராவது நான்கு சக்கர வாகனங்களில் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருப்பார்கள். அப்படி சென்றவர்கள் அங்கே பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். ராஜநாகக் குட்டிகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அந்தப் பகுதி இருந்திருக்கும். அதன் காரணமாக அந்த வாகனங்களின் சந்து பொந்துகளில் ஏறி ராஜநாகக் குட்டி தங்கி இருக்கும். அதன் மூலம் இப்பகுதிக்கு வந்திருக்கும். அது இங்கே வளர்ந்து 12 அடி நீளம் உள்ள ராஜநாகமாக வளர்ந்துள்ளது எனத் தெரிய வருகிறது
இதனால் கிராம பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இருந்தும் இந்த ராஜநாகத்தின் நடமாட்டம் தெரிந்த உடனே எங்களுக்குத் தகவல் அளித்தால் உடனே விரைந்து வந்து அதைப் பிடித்து வனத்துறையில் விடுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர். திண்டிவனம் பகுதியில் ராஜநாக நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.