Skip to main content

விடாத கனமழை... அந்தரத்தில் தொங்கும் நீலகிரி!!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
rain weather in nilgiris

 

 

நீலகிரி கரோனோ தாக்குதலில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கையில் தென்மேற்கு பருவமழை நீலகிரியை அந்தரத்தில் தொங்க வைத்து விட்டது. மேல் பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி. மீட்டரும் மழை பெய்துள்ளது. 

 

இந்த இரண்டு இடங்களும் காடுகள் எனச் சொல்லப்பட்டாலும் மக்கள் அதிகமாய் வசிக்கும் கூடலூரில் 201.மி.மீட்டர் மழை ஒரே நாளில் பெய்து மக்களை கரோனோவை விடவும் திணறடித்துவிட்டது. கூடலூரில் பெய்த மழையால் பாண்டியாறு, மாயாறு ஆறுகளில் வெள்ளம் பீறிட்டு ஓட, கூடலூரின் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாகச் செல்லும் ஆற்று வாய்க்கால் கரை உடைந்தது.

 

கிராமத்திற்குள் புகும் வெள்ளத்தை கண்டு ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் குழந்தைகளோடு பாதுகாப்பு இடங்களில் தங்கி விட்டனர். ஆனால் இன்னொரு பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருந்தது மழை. எனினும் தீயணைப்பு படை வீரர்கள் கயிறுகள் கட்டி பெண்கள், குழந்தைகளை உயிர்ச் சேதமின்றி மீட்டனர். மீட்கப்பட்ட 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக் கூடத்திலும், கூடலூர் தேன்வயல் ஆதிவாசி கிராமத்து மக்கள் 175 பேர் புத்தூர் வயல் அரசு பள்ளிக் கூடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

ஊட்டி, எமரால்டு பகுதியில் வீசிய காற்றும், மழையும் 20-க்கும் மேற்பட்ட மரங்களை சாய வைத்து இருளிலும் மக்களை சிக்கி தவிக்க வைத்துவிட்டன. மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

 

நீலகிரி தொகுதியின் எம்.பி.யான தி.மு.க.வின் ஆ.ராசா, கட்சியினரிடம், என்னால் உடனே அங்கே வராத சூழல் கரோனோ இருப்பதால் பொதுமக்கள் பாதிக்காதவாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். அதற்கான செலவீனங்களை நான் செய்கிறேன் எனச் கூறியுள்ளாராம்.

 

அதன்படியே கட்சிக்காரர்களும் களம் கண்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே 2009-ல் ஆ.ராசா எம்.பி.யாக நீலகிரியில் வெற்றி பெற்றபோது, இதை விடவும் நீலகிரியில் மழை பேயாய் பொழிந்து. கோத்தகிரி, குன்னூர் சாலைகள் இரண்டாய் பிளந்தன. வீடுகள் இடிந்து உயிர்கள் பலியாகின. ஆனால் உடனே ஆ.ராசா துரிதமாய் செயல்பட்டு சாலைகளை சரி செய்தார்.

 

இறந்த உயிர்களின் குடும்பத்தாருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார். அதேபோல இப்போதும் செய்து கொடுப்பார் என நாங்கள் உறுதியாய் நம்புகிறோம் என்கிறார்கள் இந்த பெருமழையால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் கூடலூர் மக்கள். நேற்றிரவு வீசிய பலத்த காற்று மரமொன்றை சாய்த்து முதல் உயிர் சேதத்தை ஊட்டியில் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்