Skip to main content

உணவகங்களில் திடீர் சோதனை; 56 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

raids on restaurants; 56 kg of spoiled meat confiscated!

 

சேலம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில், உணவகங்களில் இருந்து 56 கிலோ கெட்டுப்போன சிக்கன், மட்டன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

 

நாமக்கல்லில் துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி அண்மையில் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சைவ, அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், சேலம் மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், சில்லி சிக்கன் கடைகள், துரித உணவகங்களில் வியாழக்கிழமை (அக். 5) திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

 

raids on restaurants; 56 kg of spoiled meat confiscated!

 

சேலம் மாநகரில் 3 சாலை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளிலும், மாவட்டத்தில் சங்ககிரி, கெங்கவல்லி, ஓமலூர், வாழப்பாடி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளிலும் உள்ள முன்னணி உணவகங்களில் சோதனை செய்தனர். மொத்தம் 69 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 12 கடைகளில் விதிமீறல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த சோதனையில், பழைய மற்றும் கெட்டுப்போன சிக்கன், மட்டன் இறைச்சி 56 கிலோ பறிமுதல் செய்தனர்.

 

சரியாக வேக வைக்காத பிரியாணி, தரமற்ற இட்லி, கெட்டுப்போன சட்னி, சாப்பாடு, நூடுல்ஸ் ஆகிய உணவுப் பொருட்கள் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மீது பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 11 கிலோ, பான் மசாலா, குட்கா ஆகியவை 1.50 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. 8 உணவு நிறுவனங்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

ஓமலூரில் உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் இல்லாமல் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு மூடி 'சீல்' வைத்தனர்.

 

இதுபோன்ற திடீர் சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், விதிகளை மீறி செயல்படும் உணவு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்