புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2018-ல் வெளிவந்த சிறந்த திரைப்படத்திற்கான விருது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி, செயலாளர் அ.மணவாளன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 3-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற பிப்.15 முதல் 24-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா குறித்த தகவல்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் வரவேற்புக்குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் விரிவான விளம்பரம், அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் விழிப்புணர்வுப் பேரணி, பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துவருதற்கான வாகனவசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கம் போல இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவில் சிறந்த கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்களுக்கான விருதும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் கூடுதலாக 2018-ல் வெளியான சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த குறும்படத்துக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில் 2018-ல் வெளியான சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 24 அன்று விழா மேடையில் இயக்குனரை அழைத்து விருது வழங்கி கவுரவிக்கப்படும். இதர விருதுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திரைப்பட விருதுக்கான தேர்வுக்குழுத் தலைவர் எஸ்.இளங்கோ..
சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த தமிழ் இலக்கியப் பதிவுகள் ஏராளமாக வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மக்கள் கலையான தமிழ் சினிமாவில் சாதிய ஒடுக்குமுறை குறித்த பதிவு இல்லையென்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் பரியேறும் பெருமாள். நம் அன்றாம் சந்தித்துவரும் சாதிய சமூகத்தை அப்படியே நகலெடுத்து வைத்திருக்கிறது படத்தின் திரைக்கதை. ஒரு துளியளவு கூட குறைவுமில்லை; மிகையுமில்லை. உலக சினிமாக்களில் நாம் காணும் நேர்த்தியான திரைக் கதை அமைப்பு பரியேறும் பெருமாளில் உள்ளது. கதை வசனம் எழுதி இயக்கியும் இருக்கிற மாரி செல்வராஜ் தனது மற்றும் தன்னைச் சுற்றியுள்ள தனக்கு நெருக்கமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கதையைப் படைத்துள்ளார். அச்சு அசலாக சாதிய அவலத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து, சாதிய மனோபாவத்துடன் இருப்பவர்களை குற்ற உணர்வுக்குத் தள்ளும் வகையில் நேர்த்தியான வகையில் படமாக்கியுள்ளதற்காக இந்தப்படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்றார்.