தொடக்கத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பும் நபர்களுக்கு பூ, பழம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சை முடிந்தவுடன் அவர்களை வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது முதியவர். தச்சு தொழிலுடன், ஜாதக கணிப்பாளராகவும் இருந்துள்ளார். தினசரி பலர் ஜாதகம் பார்க்க வந்த இடத்தில் கரோனா தொற்றி கொண்டது.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை ராணியார் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிலநாட்களில் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அருவரும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து முதியவர், அவரது சொந்த ஊரான நாகுடி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று திரும்பினார்.
அரசு மருத்துவமனை வாகனத்தில் வீட்டிற்கு வந்த அவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் மேளதாளங்களுடன் மாலை அணிவித்து கார் மூலமாகவும், ஊர்வலமாகவும் கூட்டிச் சென்றனர். சாலையில் நின்ற பெண்கள், பொதுமக்கள் கைதட்டியும் கையெடுத்து வணங்கியும் வரவேற்றனர். முதியவர் குணமடைந்த நிலையில் கிராம மக்கள் இளைஞர்கள் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.