Skip to main content

ஜல்லிக்கட்டில் வென்ற புதுக்கோட்டை 'புல்லட்' -அமைச்சர் நேரில் வாழ்த்து!

Published on 18/01/2022 | Edited on 19/01/2022

 

Pudukottai bullet Bull

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழன் (எ) தமிழ்செல்வனின் 'புல்லட்' என்கிற காளை நின்று விளையாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசாக காரை வாங்கி வந்திருக்கிறது. இந்த காளை கடந்த 2019 ம் ஆண்டு 2000 காளைகளுடன் சாதனைக்காக நடத்தப்பட்ட  விராலிமலை ஜல்லிக்கட்டில் பங்கேற்று முதல் பரிசான புல்லட் வாங்கி வந்ததால் இந்த காளைக்கு புல்லட் என்றே பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

 

இதேபோல சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் திமுக பிரமுகர் பெயரில் அவிழ்க்கப்பட்ட தமிழனின் கரிகாலன் காளை முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வாங்கி வந்திருக்கிறது. இவரிடம் தற்போது உள்ள 28 காளைகளில் விரும்பனுக்காக நல்ல களமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல பாசமாக இருக்கும் அன்பு, ராப்பூசலில் அவிழ்த்து வென்று வந்த பூந்திக்குட்டை (வென்றுபோது பூந்தி வாங்கி சாப்பிட்டதால் இதற்கு பெயர் பூந்திக்குட்டை) 2 கிமீ வரை வேகமாக ஓடும் அத்லட், பெரியவர் இப்படி பல காளைகள் அடுத்தடுத்த களங்களுக்கு தயாராகி வருகிறது.

 

இவரிடம் இருந்து பயிற்சி பெற்று பல வாடிகளில் வெற்றிபெற்ற கொம்பனை ஓபிஎஸ் கேட்டும் கொடுக்காமல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்டு நின்று விளையாடி பெயர் பெற்றது.இப்படி இவரிடம் உள்ள அத்தனை காளைகளுமே வெற்றி வீரனாகவே உள்ளது.

 

Pudukottai bullet Bull

 

இந்நிலையில் அலங்காநல்லூரில் வென்ற புல்லட்டை பார்க்க பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இளைஞர்களும் நேரில் வந்து பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று புல்லட் கொம்பில் பட்டு வேட்டி கட்டி தடவிக் கொடுத்தவர், காளை உரிமையாளர் தமிழனுக்கும் சால்வை அணிவித்து புதுக்கோட்டைக்கு புகழ் சேர்க்கும் தங்களுக்கும் தங்கள் காளைகளுக்கும் பாராட்டுகள் என்றார். அவருடன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட துணைத்தலைவர் கல்லாலங்குடி அன்பு, எம்.எம்.பாலு உள்பட பலரும் வந்திருந்தனர்.

 

இது குறித்து தமிழ்செல்வன் கூறும் போது.. ''40 வருசமா 400 க்கும் மேற்பட்ட காளைகள் வாங்கி வளர்த்திருக்கிறேன். சூர்யா என்ற காளை தான் எனக்கு முதலில் பெயர்வாங்கி கொடுத்தது. 3 முறை விற்று திரும்பவும் வாங்கி வந்தேன். சூர்யா இப்ப எங்களிடம் இல்லை. ஒவ்வொரு ஊராக போய் பார்த்து கன்றுகளையும் காளைகளை அதன் குணம் பார்த்து வாங்கி வருவேன். பெரிய பயிற்சி என்பதெல்லாம் சும்மா. அதன் குணம் தான் முக்கியம். காளைகளை நான் வாங்கி வந்தாலும் அதனை பராமரிக்க பலர் இருக்காங்க. எல்லாமே அவங்க தான். ஒவ்வொரு முறை காளைகள் வெல்லும் போதும் அந்த மகிழ்ச்சியை அவர்களிடம் பார்த்து நானும் மகிழ்வேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்