புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5வது புத்தகத் திருவிழா இன்று(29ம் தேதி) காலை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த தொடக்க விழாவில், அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு திறந்து வைத்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ரகுபதி ரூ. 1 லட்சத்திற்கு புத்தகம் வாங்கிக் கொண்டு மேலும் ரூ.2 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதில் பேசிய அவர், “புதுக்கோட்டை மண்ணின் எழுத்தாளர்களின் நூற்றாண்டை கொண்டாடும் போது பிரமாண்டமான புத்தகத் திருவிழாவும் நடப்பது பெருமையாக உள்ளது. முனனாள் முதலமைச்சர் கலைஞர், புத்தகம் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் வழிவந்த தற்போதைய முதலமைச்சர் தனக்கு பொன்னாடைகள் வேண்டாம் புத்தகமாக கொடுங்கள் என்று வாங்கி நூலகங்களுக்கு வழங்கி வருகிறார். மாணவர்கள் தொடர்ந்து வாசித்தால் நினைவுத் திறன் அறிவாற்றல் வளரும்” என்று பேசினார்.
இந்நிலையில் நாளை (30ம் தேதி) அமைச்சர் ரகுபதிக்கு பிறந்த நாள் என்பதை கவிஞர் தங்கம் மூர்த்தி நினைவூட்டிய நிலையில், திரண்டிருந்த மாணவ, மாணவிகள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி அமைச்சரை நெகிழ வைத்தனர். மேடையிலேயே புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். விழாவில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.