புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் மேற்பனைகாடு செல்லும் வழியில் கரையில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாகி விளைநிலங்களில் பாய்ந்தோடியது.
கரை உடைப்பைச் சரி செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். சுமார் 300 கன அடி தண்ணீர் வந்ததால் உடைப்பை அடைப்பதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. அதனால் கடைமடைக்குத் தண்ணீர் செல்லவில்லை. அதன் பிறகு ஈச்சன்விடுதியில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரம் போராடி தற்காலிகமாக உடைப்பு சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு நின்ற கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன் எலி ஓட்டை போட்டதால் உடைப்பு ஏற்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்ட பொது மக்கள் 20 அடி அகலமுள்ள கரையை எலி எப்படி ஓட்டை போடும் என்று கேள்வி எழுப்பிருகின்றனர்.
மாலையில் வந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கரை பலமில்லாததால் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கரை பலப்படுத்தப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கரையில் மண் கொட்டியும் தடுப்புக்கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கியும் கரையைப் பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அடித்துச் சென்றதால் பயிர்கள் மூழ்கி நாசமானது. இன்று நாசமான பயிர்களை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இன்று மாலை வரை கரையைப் பலப்படுத்தும் பணிகள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.