தன் வீட்டில் விபரம் தெரிந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, பல பெற்றோர்கள் அடிக்கடி சண்டைப்போட்டுக் கொள்வதால் பல குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த குழந்தைகள் மற்றவர்களிடம் இருந்தும் விலகி இருக்கிறார்கள். குழந்தைகளின் மனநிலையை அறியாத பெற்றோர்களால் அந்த குழந்தைகளில் வாழ்க்கை நாசமாகிறது என்பதை உணர வேண்டும். அப்படியான ஒரு பெற்றோருக்கு தனது மரணத்தின் மூலம் ஒரு பாடத்தை உணர்த்தி இருக்கிறாள் ஒரு கல்லூரி மாணவி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கோவிலூா் சம்பாமனை கிராமம். விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமம் அது. இந்த ஊரை சேர்ந்தவர் பழனிவேல் இவரது மகள் சுமித்திரா (20) புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார். இவருடன் ஒரு சகோதரியும், 2 சகோதரர்களும் உள்ளனர்.
பழனிவேலும் அவர் மனைவியும் தினசரி வீட்டில் சண்டையிட்டுக் கொள்வதை அருகில் இருக்கும் இந்த குழந்தைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் சற்று துணிச்சலான சுமித்திரா.. நீங்கள் அடிக்கடி சண்டைப் போடுவதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். தம்பி, தங்கைகளும் அழுகிறார்கள் இனிமேல் சண்டை போடாதீர்கள் என்று பல முறை சொல்லியும் யாரும் கேட்கவில்லை.
அதன் பலன்.. இன்று காலையும் வழக்கம்போல சண்டை நடந்த நிலையில் மீண்டும் பெற்றோரிடம் சொல்லி பார்த்த சுமித்திராவுக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை, சண்டை தொடர்ந்தது. அதன் பிறகு சட்டென்று ஓடினார் அவர் பின்னாலேயே அரவது தம்பியும், அக்காவும் போகாதே என்று அழுது கொண்டே ஓட.. வேகமாக ஓடிய சுமித்திரா சற்று தூரத்தில் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். பின்னால் ஓடிய தம்பி அழுது கொண்டே வந்து விபரம் சொல்ல, ஆலங்குடி தீயணைப்பு வாகனம் வந்து நீண்ட நேரம் போராடி சுமித்திராவின் சடலத்தை தான் மீட்க முடிந்தது.
மீட்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருந்தாத பெற்றோரை திருத்த நினைத்த கல்லூரி மாணவி தனது உயிரை பணயமாக வைத்து விட்டாள். பெற்றோரை திருத்த மரணம் மட்டுமே தீர்வு இல்லை என்பதை அந்த நேரத்தில் அந்த மகளுக்கு சொல்லி, அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற கூட அருகில் யாரும் இல்லை என்பதுதான் வேதனை.