Skip to main content

நடராஜர் கோவில் கனகசபையில் மீண்டும் பொதுமக்கள்; உற்சாகத்துடன் வழிபாடு!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

public Worship with enthusiasm in Natarajar Temple Kanakasabai again

 

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து கடந்த 5 மாதத்திற்கு முன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தநேரத்தில் கோவிலில் எப்போதும் போல கனக சபையில் ஏறி வழிபடச் சென்ற பட்டியல் சமூகப் பெண் ஜெயசீலா என்பவரை தீட்சிதர்கள் வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர்.

 

இது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீட்சிதர்களின் செயல்பாட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், சிவனடியார்கள் உள்ளிட்ட  பொதுமக்கள், பக்தர்கள் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் எனக் கோவில் வாயிலில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

இதன் விளைவாக (மே-19) அன்று தமிழக அரசு கனகசபை மீது ஏறி அனைத்து தரப்பு மக்களும் வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது.  இதற்கு பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விபரம் அளிக்கக் கோவில் தீட்சிதர்களுக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் அரசாணையை அமல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தீட்சிதர்கள் தரப்பில் அரசாணை போடுவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. கோவிலில் அரசாணையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும். தற்போது கனக சபையில் வெள்ளி பூஜை பொருட்கள் உள்ளது. எனவே தீட்சிதர்களைத் தவிர யாரையும் அனுமதிக்க முடியாது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அப்போது கூடுதல் ஆட்சியர் அரசாணை வெளியிட்ட நேரத்தில் இருந்து அது அமலுக்கு வந்து விட்டது. எனவே அனைவரும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட தீட்சிதர்கள் சிலர், அரசு அதிகாரிகளை உடல் மொழி செய்கையால் கேலி செய்தனர். இதற்கு சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் சம்பந்தப்பட்ட தீட்சிதரை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

 

கோவிலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்,  வழிபாடு செய்ய வந்தபோது வெளியேற்றப்பட்ட பட்டியல் சமூகப் பெண் ஜெயசீலா, தெய்வ தமிழர் பேரவையினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடராஜர் கோவில் கனகசபையில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்