Skip to main content

இரு மாவட்டங்களுக்குப் பொது விடுமுறை அறிவிப்பு!

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Public holiday announcement for two districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயம் விடாது பெய்யும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் (19.12.2023) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (19.12.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். அதோடு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை (19.12.2023) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Public holiday announcement for two districts

இந்நிலையில் அதிகனமழை காரணமாகத் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கும் நாளை (19.12.2023) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று (18-12-23) பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.