கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள இறையூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் அவர்களது கோரிக்கைகளான, ‘2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த எம்.ஆர்.பி தொகை சுமார் 40 கோடி வட்டியுடன் வழங்கிட வேண்டும்; 2018 வரை மாநில அரசு எஸ்.கே.பி அறிவித்த தொகையை வட்டியுடன் 125 கோடியாக வழங்க வேண்டும்; விவசாயிகள் பெயரில் தேசிய வங்கிகளில் அடமானம் வைத்து 300 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஆலை உரிமையாளர், பொது மேலாளர், வங்கி அதிகாரிகள் ஆகியோர் மீது நீதி விசாரணைசெய்து கரும்பு விவசாயிகளைப் பாதுகாத்திட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;
ஸ்ரீ அம்பிகா, திரு. ஆரூரான் சர்க்கரை ஆலைகளின் 2021 - 22 அரவை பரிவர்த்தனையை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும்; டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அங்கு சென்று ஆதரவு தெரிவிப்பது” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.