தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி அவர்களை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளித்திருக்கிறது தமிழக அரசு. இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
தமிழக அரசில் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத்ராம் சர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கோபால் ஆகிய 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதன்மைச் செயலாளர்களாக இருக்கின்றனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராக ராஜேந்திரகுமார், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சேவைத்துறையின் முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும் முதன்மைச் செயலாளராகவும் ராஜேஷ் லக்கானி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மா, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளராக குமார் ஜெயந்த், தமிழக போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளராக கோபால் ஆகியோர் தற்போது பணியில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் 1992 ஆம் வருடம் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வாகி தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தமிழக அரசில் பணியில் இணைந்தனர். முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த இவர்களுக்கு தற்போது தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினிடம் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி நேற்று (23.12.2022) தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை பிறப்பித்திருக்கிறார்.