2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் தற்பொழுது துவங்கியது. வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்கையில், 'நிதி நிர்வாகத்துறையில் நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 1,461.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ராமநாதபுரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பூண்டி, தருமபுரி, குற்றாலத்தில் அகழ்வைப்பகங்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். அரசு பள்ளிகளை நவீனமாக்க பேராசியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும். ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 7,000 கோடி ரூபாயில் அரசு பள்ளிகள் நவீனப்படுத்தப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நான்கு இலக்கிய திருவிழாக்கள் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். சுற்றுச்சூழல்துறைக்கு 849 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாய கடன்களுக்கு 4,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறைக்கு 496.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வானிலையைத் துல்லியமாகக் கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும். சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறைக்கு 13.176 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகத்தை அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தொடர்ந்து வாசித்து வருகிறார்.