நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக மட்டும் திறக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கையை வைத்திருந்தது. அதன்பிறகு அனைத்து கட்சி கூட்டம், உச்சநீதிமன்றத்தில் மனு என இறுதியாக, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆலை நடத்துவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆனாலும் தூத்துக்குடி மக்களிடையே ஆலைத் திறப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இயக்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அப்போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை அப்போராட்டக் குழுவினர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாத்திமா பாபு, “இந்த ஆலை செய்திருக்கிற குற்றங்கள் பல உள்ளன. அதிலும் இவர்கள் செய்து வரும் நீர், காற்று, சுற்றுசூழல், கழிவுகளை கையாள்வது, குற்றங்கள், பொய்கள் என இவர்கள் மீதான குற்ற செயல்கள் பல உள்ளன. அவை அனைத்துமே மிக பெரிய குற்றங்கள். இந்த அனைத்து குற்றங்கள் மீதும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் ஆலையை திறப்பதற்கு முன்னரே உற்பத்தியை தடுத்து நிறுத்த முடியும். அது சட்டப்படி, நீதிமன்றத்தின் முறைப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கும். அதை தான் நாங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக ஆட்சியர் மூலம் வைத்துள்ளோம். இன்று ஆட்சியரிடம் ஆழுத்தத்தை கொடுத்தும், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அடுத்தக்கட்டமாக போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.