தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலமே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, அரசின் கருவூலம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம், அரசின் கருவூலம் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் ஊதியமாக காட்டப்படும் கணக்கு அதிகமாகவும், உண்மையில் கொடுக்கப்படும் ஊதியம் அதை விட மிகக் குறைவாகவும் உள்ளது. வருமான வரி அலுவலகம், இதன் பேரில் ஆய்வு செய்தால், மிகப் பெரிய முறைகேடு அம்பலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (28/09/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.