சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவந்த சீத்தா கிங்ஸ்டன் பள்ளி, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் மெட்ரிகுலேஷன் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மறுசீமைப்பிற்கு இன்று (09.07.2021) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பூந்தமல்லி சாலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் சுவாதீனம் பெறப்பட்டு, அங்கிருந்த பள்ளி கோயில் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டு, பள்ளி மராமத்துப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
இதில் அமைச்சர் சேகர் பாபு, அறநிலைய துறை ஆணையர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்தது சீதா கிங்ஸ்டன் என்கிற தனியார் பள்ளி. வாடகை அடிப்படையில் இயங்கிவந்த இந்தப் பள்ளியானது டிரஸ்ட்டின் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் அதனை அரசே ஏற்று நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கருத்தில்கொண்டு அதனை அரசே சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் இந்தப் பள்ளியில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு 37 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணிகளைத் துவங்கியிருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கையானது, 700 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் வருகிற ஆண்டுகளில் ஆயிரமாக மாற்றும் அளவிற்கு பள்ளியின் தரத்தை உயர்த்துவோம். அதேபோல் எல்.கே.ஜி வகுப்பிற்கு பள்ளி கட்டணம் 10 ஆயிரமாக இருந்ததை 5 ஆயிரமாக குறைத்துள்ளோம். 11ஆம் வகுப்பில் சேருவதற்கு 20 ஆயிரமாக இருந்ததை 10 ஆயிரமாக மாற்றியுள்ளோம். மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடை, எழுது பொருட்கள், நோட் மற்றும் புத்தகம் இலவசமாக வழங்கியுள்ளோம்”. மேலும் இந்தப் பள்ளியை வெகு சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.