கோவை, காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பேருந்திலும் இரண்டு நடத்துநர்கள் வீதம் இருநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மதுபோதையில் தனியார் பேருந்து நடத்துநர்கள் தகாத வார்த்தைகளில் பேசி சண்டையிட்டுகொள்ளும் காட்சிகள் சமூக வளைதளங்களில் பரவி வருகின்றன. தினமும் ஷிப்ட் முடிந்தவுடன் ஜோடி சேரும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி விட்டு, பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், இதன் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.