Skip to main content

எலுமிச்சம்பழம் விலை கடும் சரிவு!

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

price of lemon has fallen sharply

 

தக்காளி, சின்ன வெங்காயம் விலை ஏறிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதே தக்காளி, வெங்காயத்தை விற்க முடியாமல் வீதியில் கொட்டிய விவசாயிகளுக்கு ஈடுசெய்யும் விதமாக இந்த விலையேற்றம் இருக்கட்டும் என்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

ஆனால், இந்த விலை நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி ஏசி குடோன்களில் வைத்து பாதுகாத்த பதுக்கல்காரர்களுக்கு தான் இத்தனை லாபம் என்கிறார்கள் விவசாயிகள். மற்றொரு பக்கம் மற்ற விவசாய விளைபொருட்கள் ரொம்பவே அடிமட்ட விலைக்கு போனதால் பெருங்கவலையில் உள்ளனர் விவசாயிகள். இதில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ. 5க்கும், ரூ. 7க்கும், ரூ. 10க்கும் விற்பதால் பெருங்கவலையில் உள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, நகரம் சேந்தன்குடி, செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கோட்டைக்காடு, ஆலங்காடு என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்கப்பட்டு தினசரி 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சம்பழங்கள் தரமானதாக இருப்பதால் மதுரை, கோவை, சென்னை, தஞ்சை உட்பட பல மாவட்டங்களுக்கும், கேரளாவில் பல நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

தற்போது கடந்த சில வாரங்களாக கேரளா உட்பட பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் குளிர்பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் எலுமிச்சம்பழ விற்பனை படிப்படியாகக் குறைந்து ஒரு கிலோ ரூ. 5 முதல் ரூ. 10க்கு கீழ் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை மரங்களில் இருந்து பழங்கள் சேகரிக்கும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கக் கூட போதாது எனத் தவித்து வருகின்றனர் விவசாயிகள். கீரமங்கலம் கமிசன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சம்பழங்கள் வரத்து உள்ளது. விலை குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் கூட வெளியூர் சந்தைகளில் நட்டத்திற்கே விற்பனை செய்து வருவதாக வியாபாரிகளும் கூறுகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நிரந்தரமான விலை கிடைக்காததன் விளைவாக தினசரி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்