இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (27.11.2023) நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகப் பெங்களூருவில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.