தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ''வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இந்த பருவ மழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய அத்தனை விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் திருச்சியில் ஏர் இந்தியா விமான பிரச்சனை வந்த நேரத்தில் நம்முடைய முதலமைச்சருடைய ஆணைக்கிணங்க நம்முடைய துறையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மத்தியில் சொல்லி 18 ஆம்புலன்ஸ்கள், மூன்று ஃபயர் சர்வீஸ் வண்டிகளையும் அனுப்பி அதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.
அதேபோல நேற்று நடந்த ரயில் விபத்துக்காக 10 இடங்களில் கல்யாண மண்டபங்களை தயார் செய்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று சொன்னால் அவர்களை தங்க வைப்பதற்கு வேண்டிய அந்த வேலைகளையும் நாங்கள் செய்து வைத்திருந்தோம். அதேபோல 20 பேருந்துகளையும் தயாராக வைத்து அவர்களை ஊருக்கு அனுப்புவதற்கு வேண்டிய பணிகளையும் முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க செய்திருக்கிறோம்.
அதேபோல் வர இருக்கின்ற வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்கிறது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது. பருவமழைக்கும் முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதி பாதிக்கப்படுகிறது என்று தெரிகிறதோ அந்த பகுதிக்கு முன்பே மீட்புக் குழுக்களை அனுப்ப இருக்கிறோம். மழை பெய்து தண்ணீர் தேங்கிய பிறகு உணவு பற்றாக்குறை குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் இருப்பதை போன முறை நாம் அணுகி இருக்கிறோம். ஆக இந்த முறை முன்னெச்சரிக்கையாக அந்தந்த பகுதியிலேயே மழை பெய்வதற்கு முன்பாகவே உணவுப் பொருள்களையும், குழந்தைகளுக்கு வேண்டிய பால் பவுடர் போன்றவைகளையும் ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக ஸ்டாக் செய்து வைப்பதற்கான வேலைகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பரவலாக மழை பெய்தால் சமாளிக்கலாம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது தொடர்பாக வானிலை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் உதவிகள் தேவைப்படும் பகுதிகள் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.