காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்களைக் கடத்திவந்த நபரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து அசத்தியிருக்கிறார் மதுவிலக்குப் பிரிவு பெண் ஆய்வாளர். இடுப்பில் வைத்திருந்த கத்தியைக் காட்டித் தப்பிக்க முயன்ற கடத்தல்காரரைப் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. இதனைச் சாதகமாக்கிக்கொண்ட சாரய வியாபாரிகள், கள்ளச்சாரயம் காய்சி விற்பதும், ஸ்பிரிட் பவுடரைக் கடத்திவந்து தண்ணீரில் கலந்து விற்பதும், காரைக்காலிலிருந்து மதுபானங்களைக் கடத்திவந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாகவே இருந்துவருகிறது.
வழக்கம் போலவே காரைக்கால் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இன்று (25.06.2021) மதுவிலக்குப் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே, வேதாரண்யத்தை அடுத்துள்ள நாலுவேத பதியைச் சேர்ந்த முருகையன் என்பவர், இரண்டு பெரிய பைகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். முருகையனோ போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து நாகை மதுவிலக்குப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஆய்வாளர் டோனிஸ் மேரி உள்ளிட்ட மதுவிலக்கு போலீசார், சாராயம் கடத்திச் சென்ற முருகையனை இருசக்கர வாகனத்திலேயே சுமார் ஏழு கிலோமீட்டர் துரத்திற்கு விரட்டிச் சென்று நாகை கடைவீதி அருகே மடக்கிப் பிடித்தனர்.
மதுபோதையில் இருந்த அந்த நபர் சாவிக் கொத்தில் இருந்த கத்தியைக் காட்டிப் போலீசாரைக் குத்திவிடுவதாக மிரட்ட, இதனைச் சுற்றி நின்று பார்த்த பொதுமக்கள், தப்பிச் செல்ல முயன்ற நபரை போலீசாருடன் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த டிராவல் பேக்கை சோதனை செய்ததில் 78 குவாட்டர் பாட்டில்கள், 12 ஃபுல் பாட்டில்கள் இருந்தன.
முருகையனை கைது செய்த மதுவிலக்குப் போலீசார், அவரிடமிருந்து மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சினிமா காட்சியைப் போல் அரங்கேறிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்துவருகிறது.