ஆசியாவில் மிக பிரபலமான மருத்துவமனை வேலூரில் உள்ள கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மருத்துவமனை கல்லூரியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் வருவார்கள். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக வருவார்கள். தினமும் 3 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், சி.எம்.சி. வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. நோயாளிகளுக்கு, மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு, ஊழியர்களுக்கு பலவித முன்னேற்பாடுகள் செய்தும் அதனை பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதேபோல் கரோனா நோயாளிகள் குறித்த பட்டியலையும் சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகம் சரியாக தரவில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இந்நிலையில் தற்போது சி.எம்.சி.யில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஜூன் 23ந்தேதி சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர், கண்காணிப்பாளர் அலுவலங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் எனக்கூறப்படுகிறது.
கரோனாவுக்கு சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள் பட்டியலில் சி.எம்.சி.யும் உள்ளது. அதேபோல் கரோனா பரிசோதனை செய்யும் மையத்துக்கான அங்கீகாரமும் சி.எம்.சி.க்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 163 பேர் சி.எம்.சி.யில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகிறார்.