திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் அரசினர் சிறுபான்மையினர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொள்வதாக தகவல் பலகையில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகளிடம் விசாரித்த பொழுது 17 பேர் மட்டும் விடுதியில் தங்கி பயின்று வருவதாக தெரிவித்தனர்.
விடுதி சமையலர் காலை 8.30 மணிக்கு மேல் விடுதிக்கு வந்து சமைப்பதால், காலை உணவை மாணவிகள் உண்ண முடியாமல் கல்லூரிக்கு செல்வதாகவும், மாலை கல்லூரியில் இருந்து திரும்பிய பின்னரே தினந்தோறும் காலை உணவையே சாப்பிட வேண்டிய அவல நிலை நீடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம், இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விடுதி காப்பாளர் விசாரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விடுதிக்கு வந்த காப்பாளர் புகார் அளித்த மாணவிகளை அழைத்து மிரட்டி உணவின் மீது எந்த பிரச்சனையும் இல்லை உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதாக கடிதம் ஒன்றை எழுதி அனைவரையும் அதில் கட்டாயமாக கையெழுத்தை இடவேண்டும் என வற்புறுத்தி மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளரை தொலைபேசியில் அழைத்து தாங்கள் விடுதி காப்பாளரால் மிரட்டப்படுவதாகவும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விசிக மாவட்ட செயலாளர் உடனடியாக தகவலை சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜ ராஜனுக்கு தகவல் அளித்துள்ளார்.
விடுதிக்கு இரவில் வந்த அலுவலர் சம்பந்தப்பட்ட காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டார். தாங்கள் தொடர்ந்து காலையில் உணவு அருந்தாமல் கல்லூரிக்கு செல்வதாகவும், உணவு பட்டியலை காட்டி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர் தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலில் உள்ளவாறு ஒரு நாள் கூட தோசையோ அல்லது பூரியோ உணவை கண்ணால் கண்டது கூட இல்லை எனவும், தினந்தோறும் காலையில் சாப்பாடு மட்டுமே செய்து கொடுப்பதாகவும் புகார் அளித்தார். மேலும் அந்த காலை உணவு கூட காலை 8.30 மணிக்கு மேல் சமைக்கப்படுவதால் காலையில் சிற்றுண்டியை சாப்பிட்டு கிளம்பி கல்லூரிக்கு செல்ல காலதாமதமாகும் என்பதால் தினந்தோறும் காலையில் சாப்பிடாமலேயே கல்லூரிக்கு சென்று மாலை கல்லூரியில் இருந்து விடுதிக்கு திரும்பிய பின்னரே தினமும் உணவை சாப்பிட வேண்டிய சூழல் தொடர்வதாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல் விடுதியில் குடிக்க தண்ணீர் கூட இல்லை எனவும், குடிதண்ணீரை விலை கொடுத்து மாணவிகள் வெளியில் வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் விடுதியில் மாணவிகளுக்கு குளியல் மற்றும் சலவை சோப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பொருட்கள் தங்களுக்கு அரசாங்கத்திலிருந்து வழங்கப்படும் நிலையில், அது தங்களை வந்து சேர்வதில்லை. மேலும் குளியலறையில் பக்கெட், வாளி படுக்கை அறைக்காக பாய், தலையணை, போர்வை என அனைத்து பொருட்களையும் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துவதாகவும் இறுதியில் எதுவுமே தங்களுக்கு தரப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்களிடம் தகவல் அறிந்து கொண்ட சிறுபான்மை நல அலுவலர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றுள்ளார்.