தைப் பொங்கல் தினத்தைத் தொடர்ந்து அறுவடைக்குப் பின்பு கிராமப் புறங்களில் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் களைகட்டும். சிலம்பம், மல்யுத்தம், கபடி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் என்று அன்றைய தினம் கூத்தும் பாட்டும் விளையாட்டுக்களும் தூக்கலாக இருக்கும். காண்பதற்கு அற்புதமாகவும் வித்தியாசமான அனுபவமும் கிடைக்கும். அதற்காகவே கிராமப்புறங்களில் கூட்டம் திரளுவதுண்டு.
முந்தைய காலங்களில் திருமணத்திற்கு பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை, தன் மகளை வைத்துக் காப்பாற்றுவாரா என்று சோதிப்பதற்காக அவரை 60 கிலோவிற்கும் மேற்பட்ட இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லி சோதிப்பார்கள் பெண் வீட்டார். அதில் அவர் கல்லைத் தூக்கி தோளில் வைத்து பின்புறம் தள்ளிவிட வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றால் பெண். இல்லையேல் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்த வழியே திரும்ப வேண்டியதுதான்.
காலப்போக்கில் அந்த சோதனை சம்பவம் மாறி, வீர தீர விளையாட்டுப் பட்டியலில் இடம் பெற்று விட்டது இது.
அந்தவகையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் பொங்கலையொட்டி இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் இடம் பெற்றது. ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். கிராமமே ஆர்வமாகத் திரண்டிருந்த விளையாட்டுப் போட்டியில் 90 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லையும் சில இளைஞர்கள் தூக்கினர். குறிப்பாக தங்கராஜ் என்பவர் 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை ஏக்தம்மில் தூக்கிச் சாதனைப் புரிந்தார். முதல் பரிசையும் அவர் தட்டிச் சென்றார். 90 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லைத் தூக்கிய வாலிபர் முத்துப்பாண்டி அதை 12 முறை கழுத்தைச் சுற்றி சாகசம் புரிந்ததால் அவருக்கும் முதல் பரிசு கிடைத்தது.
அடுத்ததாக இளவட்டக்கல்லை ஆண்களே தூக்கும் நிலையில் பெண்ணாலும் தூக்க முடியும் என வலிமையை வெளிப்படுத்தினார் பத்மா எனும் 40 வயதுப் பெண். இவர் 45 கிலோ இளவட்டக்கல்லைத் தூக்கிப் பெண்களுக்கான முதல் பரிசைப் பெற்றார். பத்மா இளவட்டக்கல்லைத் தூக்கும் போது கிராமமே ஆர்ப்பரித்து அவருக்கு ஊக்கம் கொடுத்தது.
இதில் முதல் இடம் பெற்ற இளவட்டக்கல் சாதனையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது. பணகுடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் திரைப்பட நடிகர் வின்ஸ்லி போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.