





மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை அருகே கோவளத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கடந்த அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
செயல்பாடும், ஊக்கமும் கொண்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அரசியல், வரலாறு, நிர்வாகம், மனித உரிமைகள்,பொது நீரோட்டம் அணுகுமுறைகள், சட்டம் வழங்கும் உரிமைகள், ஜனநாயக பண்புகள் ஆகியவை குறித்து முக்கிய ஆளுமைகள் மூலம் வகுப்பெடுக்கப் பட்டிருக்கிறது.
வருபவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தின் சூழல் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே ECR சாலையில் ஒரு பண்ணை தோட்டத்தில் இம்முகாம் உற்சாகம் பொங்க நடை பெற்றுள்ளது.
காங்கிரஸ் பிரமுகரும், சிறுபான்மை ஆணைய குழு தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முகாமை தொடங்கி வைத்ததோடு, சமகால ஃபாசிச அபாயங்களை ஜனநாயக தன்மைகளோடு எவ்வாறு அணுக வேண்டும் என்று தரவுகளோடு வகுப்பெடுத்துள்ளார். சமூக வலை தளங்களில் எவ்வாறு முதிர்ச்சியோடு பணியாற்றிட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளார்.
மஜக வின் இப்பயிலரங்கு முயற்சிக்கு தனது பாராட்டுகளையும் கூறியுள்ளார்.
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்கள், பொது சமூகத்தில் எவ்வாறு நல்லெண்ணங்களை பெறுவது, மதவாத அமைப்புகளின் வெறுப்பு அரசியலை எவ்வாறு முறியடிப்பது, திராவிட அரசியலின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து வகுப்பெடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இடையே இடைவேளை விடப்பட்டு சோர்வு ஏற்படாத வகையில் நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போது, திராவிட - தமிழ் தேசிய - சிறுபான்மையினர் அரசியலின் ஒற்றுமை குறித்தும், இலங்கையில் ஈழத்தமிழர்கள் - தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டிய புரிதல் குறித்தும் வகுப் பெடுத்துள்ளார்.
அன்று இரவு சே கு வேரா வரலாறு, பாலஸ்தீன வரலாறு ஆகியன குறித்த ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
பல அறிவு சார்ந்த புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இயற்கை பேரிடரின் போதும், விபத்துகளின் போதும் எவ்வாறு முதலுதவி பணிகளை செய்வது என்ற குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் துணைப் பொதுச் செயலாளர் தாஜ்தீன் ஒரு சிறப்பு பயிற்சியும் கொடுத்திருக்கிறார்.
ஒரு அரசியல் கட்சி தொண்டர்களுக்கு இப்படிப் பட்ட பயிற்சி வழங்கப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சி என்பது பாராட்டத்தக்கது.
காலை நேரத்தில் வந்தவர்கள் அனைவருக்கும் அன்றாட உடற்பயிற்சியின் அவசியம் குறித்து சிறப்பு பயிற்சியும் எடுக்கப்பட்டது.
அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
பழைய மரபுகளை நினைவூட்டும் வகையில், தரையில் அனைவரும் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அனைவரும் அதை பின்பற்றியுள்ளனர்.
முகாமில் வருகை தந்தவர்களோடு தனித்தனியாக நேரம் ஒதுக்கி தமிமுன் அன்சாரி கலந்துரையாடி அவர்களின் எண்ணவோட்டங்களை அறிந்திருக்கிறார். இது நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அதுபோல் மத நல்லிணக்கத்தை ஒரு கொள்கை அரசியல் கொள்கையாக பின்பற்றி வரும் மஜகவில் சகோதரத்துவம் எப்படி உள்ளது ? என்பதும் அங்கு தெளிவானது.
முஸ்லிம் நிர்வாகிகள் உரிய நேரங்களில் தொழுகை நடத்தும் போது, இந்து மற்றும் கிரித்தவ சமூக நிர்வாகிகள் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட செயலாளர் ஆண்டனி சிலுவை அணிந்தும், திருப்பூர் மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் விபூதி பூசியும் நிகழ்வில் இருந்ததை தனியரசும், நாஞ்சில் சம்பத்தும் பாராட்டி உள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய தமிழ் மையம் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள், கல்வி, பொருளாதாரம், ஊடகம், அரசியல் , பெண்ணியம் ஆகியவற்றில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வகுப்பெடுத்துள்ளார்.
திராவிட இயக்க செயல்பாட்டாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் ' உலகை உலுக்கிய புரட்சிகள்' என்ற தலைப்பில் எடுத்த வகுப்பு கூட்டத்தினரை கட்டிப் போட்டிருக்கிறது. பலரும் அவருடன் செல் : பி எடுத்துக் கொண்டனர்.
பூவுலகு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெற்றி செல்வன் 'சூழலியல் அரசியல் ' என்ற தலைப்பில் பேசும் போது சுற்றுச் சூழலின் அவசியம் குறித்தும், உலகம் எதிர்நோக்கும் சூழலியல் சிக்கல்கள் குறித்தும் வகுப்பெடுத்திருக்கிறார்.
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயலாளர் ஆசிர்வாதம் மனித உரிமைகள் குறித்து எடுத்த வகுப்பில், அரச வன்முறைகள்,எண்கவுண்டர், மனித உரிமை மீறல்களை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து குறிப்புகளை கொடுத்திருக்கிறார்.
சங்பரிவார் அமைப்புகளில் பணியாற்றி தற்போது, அவர்களுக்கு எதிராக வலை தளங்களில் இயங்கி வரும் சத்திய பிரபு செல்வராஜ் அவர்கள், தங்களிடம் எப்படியெல்லாம் சிறுபான்மையினருக்கு எதிராக நச்சுக் கருத்துகள் புகுத்தப்பட்டது என்பதை விவரித்தார்.
தான் இப்போதும் பக்தியுள்ள இந்து என்றும், அதனால் தான் காவி வேட்டியுடன் இங்கு வந்திருப்பதாகவும், தான் சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து தரப்போடும் இணைந்து பாடுபட போவதாகவும் பேசியது பலத்த கைத்தட்டலை பெற்றது.
நிகழ்ச்சியின் இடையிடையே தமிமுன் அன்சாரி உலக அரசியல், உள்நாட்டு அரசியல், வரலாறு, பழைய தலைவர்கள் குறித்த செய்திகள் என தகவல்களை கூறி வகுப்புகளை நெறிப்படுத்தியுள்ளார்.
அரங்கில் நபிகள் நாயகம் பொன் மொழிகளோடு, திருக்குறள், காந்தி, நேரு, மாவோ, சே கு வேரா , அப்துல் கலாம் ஆகியோரின் கருத்துகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு சிந்தனை தூவலும் செவ்வனே செய்யப்பட்டு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர்.
அரங்கின் நுழைவாயில்களுக்கு சோழ இளவரசி குந்தவை நாச்சியார், மதவாதிகளால் சீரழித்து கொல்லப்பட்ட காஷமீர் சிறுமி ஆசிபா ஆகியோரின் பெயரும், மேடைக்கு ஹிஜாப் உரிமைக்கு போராடிய கன்னடப் பெண் முஸ்கான் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
இரண்டு நாளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது குறிப்பிடத்சுக்கது.
கேள்வி - பதில், குழு விவாதம்,விளையாட்டு, நீச்சல் குள பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, பொது நல சிந்தனைகள் என பன்முகத்தன்மையோடு இப்பயிலரங்கை நடத்தி பிற கட்சிகளுக்கு முன்னுதாரமாகியிருக்கிறது மஜக .
அக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் ரிபாயி தலைமையில் அனிஸ், முபாரக், சபி, ஜாபர், அசாருதீன், தாரிக் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடுகளை திட்டமிட்டவாறு ஒருங்கிணைத்திருக்கிறது.
பதவிகளில் இல்லாத போதும் நிர்வாகிகளை செம்மைப்படுத்தி, கட்சியை உயிர் துடிப்போடு வைத்திருக்கிறார் தமிமுன் அன்சாரி.