தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல், பிரச்சாரம் என தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்ய துவங்கின. அதிமுக முதல் கட்சியாக அதன் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் ஓ.பி.எஸ். அதிமுக வேட்பாளர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக ஆட்சியின் இறுதி சட்டமன்றக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன் இறுதிநாளில் முதல்வர் பழனிசாமி, வன்னியர் சமூகத்திற்கு 10.5% ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சீர்மரபினர் சமூகத்தினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதேபோல் தமிழக அரசு, வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க பரிந்துரை செய்திருந்தது. இதற்கு வேளாளர் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (08.03.2021) தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தை சீர்மரபினர் மற்றும் வேளாளர் சமூகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் பரவின.
அதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரகாரம் பகுதியில் உள்ள ஓ.பி.எஸ்.ஸின் பழைய வீடு மற்றும் புதிய வீட்டிற்குச் செல்லும் சாலைகள் அனைத்திலும் காவல்துறையினர் பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதனால், அப்பகுதி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.