
சென்னை மாத்தூர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார் வயது 44. இவர் ஒரு மாற்றுத்திறனாளி இவரது மனைவி சந்திரா வயது 32, இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் சென்னையில் இருந்து விருத்தாசலத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டனர்.
மாற்றுத் திறனாளியான விஜயகுமார் தனது மனைவியுடன் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிக்கொண்டே சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். நேற்று முன்தினம் இருவரும் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்ததால் உடல் அசதி ஏற்பட்டது. அதனால் கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கனூர் அருகே சாலையோரம் தங்களது மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டு விஜயகுமார் தன் மனைவியை பக்கத்திலேயே அமர்ந்து இருக்குமாறு கூறிவிட்டு உடல் அசதி காரணமாக படுத்து தூங்கினார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த விஜயகுமார் அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி சந்திராவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் எங்கு போனார் என்ன ஆனார் என்று பதறிப் போன விஜயகுமார் தன் மூன்று சக்கர சைக்கிளில் சென்று அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் மனைவி கிடைக்கவில்லை. மறுநாள் காலை 9 மணிக்கு திண்டிவனம் காவல் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார் இவரது புகாரை ஏற்றுக்கொண்டதோடு அங்கிருந்த தனிப் பிரிவு போலீஸ்காரர் ஆதி மற்றும் காவலர்கள் மணிமாறன், முரளி, சபரி, சர்குணம் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிளம்பி திண்டிவனம் பகுதி முழுவதும் சந்திராவை தேடினார்கள்.
மேலும் சந்திரா காணாமல் போனது குறித்து வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தகவல் பரிமாறினார்கள் இந்த நிலையில் காலை 11 மணியளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள நத்தமேடு என்ற பகுதியில் சந்திரா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பெண்ணை மீட்டனர். அதோடு விஜயகுமாரும் அவரது மனைவி சந்திராவையும் சென்னைக்கு மூன்று சக்கர சைக்கிளில் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால் அவர்கள் இருவரையும் அவர்களின் மூன்று சக்கர சைக்கிளையும் ஒரு டாட்டா ஏசி வாகனத்தை ஏற்பாடு செய்து அதில் பாதுகாப்பாகச் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதைக் கண்டு மனம் நெகிழ்ந்த விஜயகுமார் கண்ணீருடன் அந்த போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.