சிதம்பரம் அருகே மேல மூங்கிலடி கிராமத்தில் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு மணல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் நான்கு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்தபோது அந்த டிராக்டரை நிறுத்தாமல் காவலர்கள் மீது மோதுவதுபோல் டிராக்டர் வந்துள்ளது. அப்போது காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அவர்களது இரு சக்கர வாகனம் மட்டும் சிறிது சேதம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
பின்னர் காவல்துறையினர் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தை சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். மணல் திருட்டை தடுக்க சென்ற காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.