திருச்சி மாநகருக்குள் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் ஸ்பாவில் பாலியல் தொழில் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவலர்கள் அதிரடியாகச் சோதனை நடத்தி அந்த ஸ்பாவில் பணியாற்றிய மேலாளரையும், மூன்று பெண்களையும் கைது செய்தனர்.
இந்த ஸ்பா குறித்து தகவல் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதே சமயம் திருச்சி மாநகருக்குள் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற அதிகமான ஸ்பாக்கள் உள்ளன. அந்த ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து முன்பு திருச்சி மாநகர துணை ஆணையராகப் பணியாற்றிய ஸ்ரீதேவி, ஒரு சில காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் குறித்து மேலிடத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் சத்யபிரியா, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன், உதவி ஆய்வாளர் சட்டநாதன் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதில் ஆய்வாளர் தயாளன் அரியமங்கலம் குற்றப் பிரிவுக்கும், சட்டநாதன் உதவி ஆய்வாளர் பாலக்கரை குற்றப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் பணியிட மாற்றம் குறித்து காவலர்களுக்கும் வியாபாரிகளுக்கும் தற்போது சில முணுமுணுப்புகள் ஏற்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் ஆய்வாளர் சுகுமார் விவகாரத்தில், அவரை காத்திருக்கும் பட்டியலுக்கு மாற்றினார்கள். பின்னர் அவரை மண்டலத்தில் இருந்து மாற்றினார்கள்.
பெரும்பாலும் பெண்கள் தொடர்பான விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காவலர்களை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தாலும் மண்டல அளவில் மாற்றம் செய்வார்கள். ஆனால் ஆய்வாளர் தயாளன் விவகாரத்தில் திருச்சி மாநகரக் காவல்துறை மண்டல அளவில் மாற்றாமல் நகரத்திற்குள்ளேயே மாற்றம் நடைபெறுகிறது. கடந்த தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற ஒரு பிரச்சனையில் தயாளன் சிக்கியபோது, அவரைத் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றினார்கள். இந்த முறையும் பணியிட மாற்றம் செய்து அரியமங்கலத்தில் போட்டிருக்கிறார்கள். இதில் சுகுமார், தயாளன் இருவரும் பெண்கள் விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். ஆனால் அதில் சுகுமார் வேறு மண்டலத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் தயாளனுக்கு மட்டும் திருச்சி மாநகரக் காவல்துறையில் செல்வாக்கு அதிகம் இருப்பதால் தான் அவரை மண்டலத்தை விட்டு மாற்றாமல் இருக்கிறார்கள் என்று காவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முணுமுணுக்கின்றனர்.