தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருவதில் ஆங்காங்கே கஞ்சா வகைகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர் நெல்லை சாலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கப்பட்டிருப்பதாக திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனின் ஆலோசனையின்படி போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்றனர். அங்கு மறைவான இடத்தில் நின்றிருந்த லோடு வேனை சோதனையிட்டதில் மூன்று பெரிய சாக்கு மூட்டைகளில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த போலீசார் கஞ்சா மூட்டைகளையும் லோடு வேனையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் லோடு வேனைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், டி.ஐி.பி.யின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இந்த கஞ்சாவை கடத்தியவர்கள் யார். எங்கு கொண்டு செல்லப்படுகிறது. யார், யாருக்குத் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். பின்னர் கைது நடவடிக்கைகள் என்றார்.
பம்பர் வேட்டை
இதனிடையே மதுரை கீரைத்துறைக் காவல் நிலைய போலீசார் கஞ்சா கடத்தல் தொடர்பாக ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து மகிந்தரா பிக்கப் வேனில் 2,120 கிலோவிற்கும் மேற்பட்ட (2 டன்னிற்கும் மேல்) கஞ்சாவை ஸ்ரீலங்காவிற்கு கடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான் குளத்திலுள்ள தனியாரின் தோட்டத்திற்கு அந்த கஞ்சா நேற்று கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து கீரைத்துறைக் காவல் ஆய்வாளர் தூத்துக்குடி மாவட்ட காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். இதனால் அலர்ட் ஆன தூத்துக்குடி போலீசார் தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணித்தனர். பின்னர் கூடுதலாக வந்த மதுரை போலீசாருடன் இணைந்து தோட்டத்தை சோதனையிட்டதில் மூட்டை மூட்டையாக சுமார் 2120 கிலோ (2டன்னிற்கும்) மேலான கஞ்சா சிக்கியிருக்கிறது. இந்த மெகா வேட்டை போலீஸ் டீமையே அதிர வைத்திருக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட கஞ்சாவின் இங்குள்ள மதிப்பு சுமார் 22.25 கோடி. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 45 கோடி வரை போகலாம் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட கஞ்சா ஆபரேஷன் வேட்டையில் சிக்கிய வரலாறு காணாத மெகா பம்பர் வேட்டை இது என்று பேசப்படுகிறது.