சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இன்று (3.10.2023) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும் சாதனையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாகக் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒரு சாமானியர் தன்னுடைய விண்ணப்பம் அல்லது புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடுகின்றார் என்றால், அந்த நம்பிக்கையினைக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் அல்லது புகார்களும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்” என தெரிவித்தார்.
இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.