போலிசார் அழைத்துச் சென்ற 18 வயது மகன் தற்போது உடலில் படுகாயங்களுடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தன் மகன் உயிரை காப்பாற்றவும் தன் மகனை இப்படி தாக்கிய போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஒரு தாய் நீதிமன்ற கதவுகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளையும் தட்ட தயாராகி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்கி தங்க நகைகளை பறித்துக் கொண்டு செல்ல, அந்தச் சம்பவம் குறித்த புகார் மணமேல்குடி காவல் நிலையம் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களே சில சந்தேக நபர்களையும் அடையாளம் சொல்ல போலிசார் விச்சூர் அருகே உள்ள அம்மாபட்டினம் அஞ்சல் ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் பாண்டியன் (வயது 18) மற்றும் அவரது 17 வயது கூட்டாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரனையில் நகைகள் கிடைக்கவில்லை.
சில நாட்கள் வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடும் திரும்பவில்லை. சிறைக்கும் அனுப்பவில்லை என்பதால் பாண்டியனின் தாயார் காளியம்மாள் மணமேல்குடி, மீமிசல் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கே இல்லை என்று போலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு போன நகை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியதுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ததுடன் வட்ட சட்டப்பணிகள் குழுவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதன் பிறகு போலிசார் பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வந்த போது மயங்கி கீழே விழுந்த பாண்டியன் பின்பக்கத்தில் பலத்த அடி காயம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு மீண்டும் காவலர்களே அழைத்துச் சென்ற நிலையில் 18 ஆம் தேதி கொள்ளுவயல் ஆற்றுப்பால் அருகே 1.150 கிலோ கிராம் கஞ்சாவுடன் வந்த பாண்டியனை கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கைது செய்ததாக வழக்கு பதிவு, ரேக்ளா பந்தயம் பார்க்கப் போன இடத்தில் பாண்டியனுக்கு காயமடைந்துள்ளதாக வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவச் சான்றும் பெற்று நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிமன்ற சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் புதுக்கோட்டை சிறை நிர்வாகம் காயத்துடன் உள்ளவரை சிறையில் வைக்க முடியாது என்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர்.
மருத்துவமனையில் சேர்த்த பிறகு மருத்துவர்கள் சோதனையில் பாண்டியனின் பின்புறம் இரு பக்கமும் பலத்த காயம் ஏற்பட்டு இதனால் உப்பின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் போலீசார் விசாரனை என்ற பெயரில் தன் மகனை உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்ததால் சிறுநீரகம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் என் மகன் உயிரை காப்பாற்ற உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுக தயாராகி வருகின்றார்.
சாத்தன்குளம் போல புதுக்கோட்டை மணமேல்குடி சம்பவம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.