கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கடந்த 2ஆம் தேதி வைரமடையைச் சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர், கந்தசாமி வலசு பாலக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது பட்டியில் 2 ஆடுகள் காணாமல் போயுள்ளது.
இதேபோல் தென்னிலை கொடுமுடி ரோடு பகுதியில் வசிக்கும் கனகராஜ் என்பவரது மனைவி தேவி (39). இவர், தொண்டு காளிபாளையம் என்னும் இடத்தில் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவரும் நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது இரண்டு ஆடுகள் காணாமல் போயுள்ளது.
இது குறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி, சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து தேடி வந்தனர். நேற்று தென்னிலை அடுத்து கரூர்- கோவை ரோட்டில் வைரமடை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த காரை மறித்து விசாரணை செய்ததில், அவர்கள் சந்தேகம் படும்படி பதில் அளித்துள்ளனர். அவர்களை விசாரணை செய்ததில் தென்னிலை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (32), இவருடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஊஞ்சலூர் அருகே புரவிபாளையத்தை சேர்ந்த பிரேம்ரஞ்சன் (26) ஆகிய இருவரும் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து தென்னிலை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடிய ஆற்றை விற்ற 30,000 பணம், கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.