கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சி நகரில் செயல்பட்டுவரும் பல்வேறு கைக்கடிகாரங்கள் விற்பனையகங்களில் போலியாக கடிகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.
அதேபோல், கைக்கடிகாரங்கள் தயாரித்து விற்பனை செய்வதில் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களான டைட்டான், சொனாட்டா, ஃபாஸ்ட் ட்ராக் ஆகிய கம்பெனிகளின் கைக்கடிகாரங்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக அந்தக் கைக்கடிகார கம்பெனிகளில் ஒரு நிறுவனத்தின் முதன்மை மேலாளரான மணிமாறன் என்பவர், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில், சுமார் நான்கு கடைகளில் அந்த முன்னணி நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்படி விற்பனை செய்த சலீம் ஆதாம், பரித், ஜான் பாஷா, முரளிதரன் ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது கடைகளில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வைத்திருந்த 340 போலி கைக்கடிகாரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் அவர்களைக் கைது செய்ததோடு, விசாரணையையும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.